தளத்திற்கு வந்திருக்கும் அரிமா சங்க உறுப்பினர்களையும், வாசக நண்பர்களையும் வணக்கத்துடன் வரவேற்கிறோம்.....

Monday, 13 August 2012

கண் பார்வை குறைபாடுகள் - ஒரு விளக்கம்


        கண்பார்வை குறைபாடுகள் - ஒரு விளக்கம்
பார்வையற்றோர்க்கு, கண்ணொளி வழங்கும் உன்னதமான சேவையில் அரிமா சங்கம் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி பார்வையற்றோர்க்கு விளக்காய் திகழ வேண்டும் என 1925ம் ஆண்டு சூன் 30ம் தேதி உலக அரிமாக்களை பணித்திட்ட ஹெலன் கெல்லர் அவர்களுக்கு அரிமாக்கள் மட்டுமல்ல மக்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். அந்த உயரிய நோக்குடன் சேவைகள் தொடர்ந்து செயல்படுத்திடவேண்டும்.
பார்வையின்மை, பார்வைக்குறைபாடுகள் குறித்து தெளிவுடன் தெரிந்து கொண்டு அவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வது குறித்து அறிவோம்.
1.     பார்வையின்மை பிரகாசமான ஒளி மற்றும் இருட்டு இவை இரண்டையும் கண்ணால் வேறுபடுத்தி உணர முடியாமையே பார்வையின்மையாகும். பிறவியிலேயோ அல்லது நோய்களின் தாக்கத்தாலோ அல்லது விபத்துக்களினாலோ பார்வையின்மை ஏற்படுகிறது.
பார்வைக்குறைபாடு :  கண்கண்ணாடிகள், விழிலென்ஸ், மருந்துகள் அல்லது அறுவை சிகிட்சை முறைகள் ஆகியவற்றைக் கையாண்டும் பார்வை தெளிவாக இல்லாதிருத்தலே பார்வைக்குறைபாடு ஆகும். இக்குறைபாடு சிறிதளவு முதல் மிக அதிகமாகக் கூட இருக்கலாம். பற்பலக் காரணங்களால் உலகம் முழுவதும் 300 முதல் 400 மில்லியன் மக்கள் பார்வைக் குறைபாடுகளால் அவதியுறுகின்றனர். இதில் 50 மில்லியன் மக்கள் முழுவதுமாக பார்வையை இழந்து விடுகின்றனர். 50 வயதிற்கு மேற்பட்டோர் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
2.    பார்வையின்மையின் வகைகள் :
அ) Color Blindness: வெவ்வேறு நிறங்களை தனித்தனியாக வித்தியாசப்படுத்தி தெரிந்து கொள்ள முடியாமை. இக்குறைபாடு பரம்பரையாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெண்களை விட ஆண்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வண்ணங்களை பிரித்து அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் இவர்களின் பார்வை நன்கு இருக்கும்.

ஆ) Night Blindness: (இரவு நேர பார்வையின்மை): மங்கலான வெளிச்சத்தில் மற்றவர்களால் நன்கு பார்க்க முடியும்போது தனது பார்வை தெரியாதிருத்தல். இக்குறைபாடு பரம்பரையாகவே அல்லது வேறு நோயின் பாதிப்பாலே ஏற்படலாம். முழு வெளிச்சத்தில் பார்வையில் எந்த குறைபாடும் இருக்காது.
இ) Slow Blindness: மிக அதிகப்படியான வெளிச்சத்தில் இருந்து மாறும் போது, சிறிது நேரம் கண்பார்வை குறைவாகப்படும். போகப் போக பார்வை முழுவதுமாக தென்படும். இது தற்காலிகமானதே.

3.    பார்வைக் குறைபாடுகளின் காரணங்கள் :
பிறவிக் குருடு, முறைப்படி கட்டுப்படுத்தாத நீண்ட நாள் சர்க்கரை நோய், உரிய மருத்துவ சிகிட்சையின்றி தொடரும் இரத்த அழுத்த நோய், விழித்திரை பாதிப்பு, விபத்துக்கள், கண்புரை நோய், கருவிழியில் நோய், கண்ணில் அதிக அழுத்தம், உரிய நேரத்தில் கண்கண்ணாடிகள் அணியாமை, தொழுநோய், அம்மை நோய்கள், வைட்டமின் ஏ சத்துக்குறைவு, கண்பார்வை நரம்பு மற்றும் இரத்த நாளங்களில் நோய்கள் தாக்குதல், கண்களில் புற்று நோய் அல்லது பிற உறுப்புகள் புற்றுநோய் பரவி கண்களைத் தாக்குதல், பரம்பரை நோய்கள் மெத்தனால் போன்ற நச்சுப் பொருட்கள் தாக்குதல், கருவுற்ற காலத்தில் தாய் அவதியுற்ற நோய்கள் இன்னும் பலப்பல காரணங்கள்.
மேற்கூறிய காரணங்களை ஆராயும் போது முறையான, தகுந்த நேரத்தில் மருத்துவ ஆலோசனைப்படி நாம் நோய்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, முழுமையான மருத்துவ சிகிட்சையின் மூலம் நோய்களிலிருந்து விடுபட்டு பார்வைக் குறைபாடுகளை தவிர்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம். கண்பார்வை குறைபாடு உடையவர்களை உரிய நேரத்தில் கண்டறிந்து முறைப்படி சிகிட்சை அளிப்பதன் மூலம் பார்வைக் குறைபாடுகளை சரி செய்ய அரிமா சங்க உறுப்பினர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். 

No comments: